புதன், 24 ஜனவரி, 2018

அழுகை


என் நண்பன் சொல்லிக்கொண்டிருந்தான்
"முன்னெல்லாம் நாங்கள் கவிதைகள் எழுதுவோம்
இப்போது யாரும் எழுதுவதில்லை"

சரிதான் நண்பா
நானும் எழுத்துவதில்லைதான்

கவிதை பிறக்கும்
காதல், மகிழ்வு, கருணை
துயர், வெறுமை, விரக்தி
உழைத்தல், ஓய்தல், உய்த்தல்
என எல்லாப் பொழுதுகளும்
எனக்கும் உண்டு

கூடவே ஊறிப்பெருகும்
கவிதைப் பெருவெள்ளம் பொங்கும்
நேச மனமுண்டு

சப்தமிட்டுக் கூவும் என்
கவிதைக் குழந்தைகளை
அழவிட்டு அகன்று போகிறேன்
தினமும்

கவிதை உண்டு மனிதர் பசியாறும்
காலம் வரும்வரை
இதுவே எனதும் உனதும்  விதி


சமர்ப்பணம்

உன் உள்ளங்கை
நெல்மணி நான்
விதைப்பதும் சமைப்பதும்
உன் விருப்பம்

புதன், 5 மார்ச், 2014


காலம் 


என்னைக் கிழித்துப்போட்டாய்,

மாயப்பசை பூசி மறுபடியும் ஒட்டினாய்...

மறுபடியும் கிழித்தாய்,

கடாசி என்னைத் தெருவில் வீசினாய்...

மறுபடியும் ஒட்டினாய்...

மறுபடியும் கிழித்தாய்...

காலமே இந்தக் காகிதத்தை

இனிவரும் நொடியில் என்னென்ன செய்வாயோ?

வெள்ளி, 6 ஜனவரி, 2012

 மழையில் நனையும் வண்ணதுப்பூச்சியை
துரத்திக்கொண்டே போகிறது
குடையோடு ஒரு மனது.

செவ்வாய், 7 ஜூன், 2011


புன்னகை

உன்னிடமிருந்து தொற்றி
என் முகம் முழுவதும்
அப்பிக்கொள்கிறது ஒரு புன்னகை
துடைத்துவிட மனதின்றி
தொடர்கிறேன் ..

சனி, 4 ஜூன், 2011


நெடுநாட்களின் பின் யன்னல் திறந்தேன்
காத்திருந்ததுபோல காற்று வந்தது
பூரித்து நின்றேன்
வெய்யில் இதமாய்த் தொட.

வெள்ளி, 26 ஜூன், 2009

நேசம்
உப்பில்லா நதிகள்
சிநேகித்துவிடுகின்றன
ரோஷமின்றி...